×

ஊரடங்கு உத்தரவு எதிரொலி சூளகிரியில் விலை போகாத வெள்ளரிக்காய்: விவசாயிகள் அதிர்ச்சி

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி, கோடை காலத்தை முன்னிட்டு பரவலாக வெள்ளரி பயிரிட்டிருந்தனர். கோடைக்கு முன்பே கடும் வறட்சி நிலவிய போதிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி தோட்டத்திற்கு பாய்ச்சியதால் வெள்ளரி கொடிகள் நன்கு செழித்து வளர்ந்து பூ பிடித்து பிஞ்சு விட்டது. அப்போது, கோடை மழையும் பெய்ததால் அனைத்து பிஞ்சுகளும் நன்கு திரண்டு அறுவடைக்கு தயாரானது. ஆனால், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பறித்த வெள்ளரிக்காய்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முழுக்க முழுக்க உள்ளூர் சந்தையை நம்பியே வெள்ளரிக்காய் அறுவடை நடைபெற்றது. சத்தைக்கு வரத்து அதிகரித்ததால் விலை சரிந்தது. விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை கிடைத்த விலைக்கு விற்பனை செய்யக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சூளகிரி பகுதியில் விளையும் வெள்ளரிக்கு நல்ல மவுசு உள்ளது. இங்கிருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளரிக்காய்களை விற்பனைக்காகாக அனுப்புவது வழக்கம். கொரோனா பாதிப்பால் வாகன போக்குவரத்து தடைபட்டதால் விற்பனைக்கு வழியின்றி தவித்து வருகிறோம். மேலும், மகசூலுக்கு வந்த வெள்ளரிக்காய்களை அப்படியே விட மனமில்லாமல் விற்பனைக்கு பறித்து வந்தால் குறைந்த விலையே கிடைக்கிறது. ஒரு மூட்டை வெள்ளரிக்காய் 2000 ரூபாய் வரையிலும் விலைபோன நிலையில், தற்போது 300 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால், பெருத்த நஷ்டத்திற்குள்ளாகியுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரண உதவிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Curfew , priceless ,cucumber,farmers, shock
× RELATED மே 31, ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர்...